சென்னை: லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ’மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கிய ’கைதி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து ’மாஸ்டர்’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் அந்தஸ்து பெற்றார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’விக்ரம்’ திரைப்படம், வசூல் சாதனை படைத்தது. இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் எல்சியூ யுனிவர்ஸை உருவாக்கினார். இதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய ’லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.
தற்போது ரஜினிகாந்த், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் ’கூலி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே லோகேஷ் கனகராஜ் ’G squad’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’benz’ திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படம் எல்சியூ யுனிவர்சில் இடம்பெறுகிறது.