தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

புதுச்சேரி சிறுமி கொலை; கமல்ஹாசனின் கருத்தை விமர்சித்த இயக்குநர் லெனின் பாரதி! - புதுச்சேரி போராட்டம்

Actor Kamal Hassan: புதுச்சேரியில் சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தை இயக்குநர் லெனின் பாரதி விமர்சனம் செய்து உள்ளார்.

Actor Kamal Hassan
நடிகர் கமல்ஹாசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 6:36 PM IST

சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான நிலையில், நான்காவது நாளான நேற்று (மார்ச் 5) அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் சடலமாக இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, விவேகானந்தன் (59), கருணா (19) என்ற இரண்டு நபர்களை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமியை ஒரு வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் புதுச்சேரியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

அதில், “எங்கே போகிறோம்? புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது.

சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம்.

மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான்.

போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரின் இந்த கருத்தை இயக்குநர் லெனின் பாரதி விமர்சித்து கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் "எங்கே போகிறோம் என்று ஆராய்வதைப் போல் கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை, போதை, வெற்றுப் பெருமை, வக்கிரம், குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து "எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்" என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:புதுச்சேரி சிறுமி கொலை; உடலை பெற்ற பெற்றோர்.. நிவாரணம் அறிவித்த அரசு - வலுக்கும் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details