காசியாபாத் (உத்தரப் பிரதேசம்): இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 AD'. இத்திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் மகாபாரத கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கல்கி 2898 AD திரைப்படம் வெளியானது முதல் பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கல்கி கோயிலைச் சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவர், கல்கி அவதாரம் குறித்து கல்கி 2898 AD படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் முன்னணி நடிகர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், கல்கி அவதாரம் குறித்து தவறான சித்தரிப்பு மற்றும் பொய்யான கருத்துக்களை படத்தில் இடம் பெறச் செய்ததற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.