சென்னை: தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். 'டாடா' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் நடிக்கும் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கின. இந்நிலையில் அவரது புதிதாக உருவாகியுள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க முதல் முறையாக நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தில் உள்ள நிலையில், ’மாஸ்க்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மற்றும் விக்கி இந்த படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைக்கின்றனர். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுக இயக்குநருடன் பணியாற்றுகின்றனர்.
இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்றில் ஆண்ட்ரியா கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். மற்றொன்றில் கவின் கைகளில் முகமூடி ஒன்றை தயார் செய்வதற்கான பொருட்களுடன் இருக்கிறார். ’மாஸ்க்’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு முகமூடி அணிந்த நபராக கவின் இருக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லராக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
’மாஸ்க்’ திரைப்படத்தின் போஸ்டரில் வாத்தியாராக வெற்றிமாறன் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை தயாரிப்பாளராக வழிகாட்டுவதற்கு இந்த குறிப்பா? இல்லை இந்த படத்தில் வெற்றிமாறன் நடிக்கிறாரா? என கேள்விகள் எழுகிறது. ஏற்கனவே கவின் நடிப்பில் உருவாகியுள்ள ’கிஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாஸ்க் திரைப்படம் வருகிற மே மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பிப்ரவரியில் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம்... அஜித்தின் ’குட் பேட் அக்லி’ டீசர்
சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ’ஸ்டார்’ மற்றும் ’பிளடி பெக்கர்’ ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அடுத்தடுத்து வெளியாகும் கவின் திரைப்படங்கள் கவனிக்க வைக்கப்படுவதாக இருக்கின்றன. அடுத்ததாக நயன்தாராவுடன் நடிக்கும் படம், பொன்ராம் இயக்கும் படம் என வரிசையாக கைவசம் படங்களை வைத்திருக்கிறார் கவின். தொடர்ந்து கவனிக்க வைக்கும் திரைத்துறை நபர்களுடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.