சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் தாயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் அமரன். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக சாய் பல்லவியின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பயோபிக்காக உருவாக்கப்பட்டிருந்தது அமரன் திரைப்படம். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது.
அமரன் தொடர்ச்சியாக 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர், படத்தின் விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை அழைத்து வெற்றி நேற்று (பிப்.14) விழா நடைபெற்றது.
விழாவில் கமல்ஹாசன் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், ”கமல் சார், எனக்கு ரொம்ப சரியாக சம்பளம் வந்தது சார். ரொம்ப சீக்கிரமே சம்பளம் வந்துவிட்டது சார். இப்படி நடப்பதெல்லாம் அரிதான விஷயம் சார். இந்தக் கதை அன்பு (அன்பு செழியன்) அண்ணனுக்கு எல்லாம் தெரியும்.
என்னுடைய படங்களின் ரிலீஸுக்கு முன்னால் பாதி நேரம் அன்பு அண்ணன் ஆஃபீஸில்தான் இருப்பேன். சம்பளம் கொடுக்காமல் இருக்கறது மட்டும் இல்லாமல், வாங்கிய சம்பளத்தையும் திரும்பி வாங்கிக்கொண்டு போகிற குரூப் இங்கே இருக்கிறது. உங்களுக்கு தெரியாதது இல்லை. நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துதான் வந்திருக்கிறீர்கள். எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது.
எனக்கு படம் ரிலீஸுக்கு ஆறு மாதம் முன்பே சம்பளம் கொடுத்து, அதையும் தாண்டி, மரியாதையையும் ரொம்ப முக்கியமா கொடுப்பதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம். நீங்கள் எப்படிப்பட்ட நடிகர் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அது உலகத்திற்கே தெரியும். உங்கள மாதிரி நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும் என சொல்வார்கள். ஆனால் நான் சொல்வேன், இன்னொருவர் பிறந்து வந்தாலும் உங்களைப் போல நடிப்பதற்கு, படம் பண்ணுவதற்கு கண்டிப்பாக முடியாது.