சென்னை:ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய கமல்ஹாசன், "விபத்து, மரணம், கரோனா என அனைத்தையும் தாண்டி இந்த படம் வந்திருக்கிறது. வேறு எந்த படத்திலும் எனக்கு இப்படி நடந்ததில்லை. இந்தியன் எடுக்கும் போது தமிழில் அது தான் அதிக பட்ஜெட் படம். ஆனால், இந்தியன் 2 ஒப்பிடும் போது இந்த படம் கொஞ்சம் வசதியான பட்ஜெட் தான். ஒரே படத்தில் இத்தனை கலைஞர்கள் பெருந்தன்மையோடு வேலை செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் விவேக், சித்தார்த் போன்றவர்கள் காட்டிய உற்சாகம் பெரியது.
தமிழ் சினிமாவில் இதெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய இந்த படத்தில் இருக்கிறது. ரசிகர்களின் கருணைக்கு அளவே கிடையாது. குழந்தையை கொஞ்சுவது போல 65 வருடமாக கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். தரக்குறைவுகளை முற்றிலும் சகித்துக்கொள்ளும் தன்மை கிடையாது அது எனக்கும் சரி, ஷங்கருக்கும் சரி.
நடிகர் திலகமே என் தோளில் கையை போட்டிருக்கிறார். இதை விட வேறென்ன வேண்டும் என்று இல்லாமல், அடுத்த தலைமுறையோடு பண்ண வேண்டும். நான் 3 தலைமுறையிலும் கற்றுக் கொண்டு இருக்கிறேன். கே.பி.சுந்தராம்பாளிடம் போய் ஞானப்பழம் பாட்டுப் பாடி காட்டிருக்கிறேன். அவரிடம் இட்லி வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். அதையெல்லாம் பாக்கியமாகக் கருதுகிறேன்.