மும்பை:17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நாட்டில் பல்வேறு நகரங்களில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி, ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ளா முடியாமல் திணறியது.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது, மும்பை அணி. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 34 ரன்கள், திலக் வர்மா 32 ரன்கள் என விளாசினர். ராஜஸ்தான் அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் மற்றும் யுவேந்திர சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ரியான் பராக் அதிரடி ஆட்டத்தால், 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. 39 பந்துகளை எதிர்கொண்ட பராக் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் 3 வது வெற்றியை பதிவு செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிபட்டியலில் முதல் இடம் பிடித்தது.