சென்னை: நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில், நேற்று நாரத கான சபாவில் நடைபெற்ற ‘சென்னையில் அயோத்தி’ என்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது, "இன்றைய தினம் சரித்திரத்தில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி நடக்கின்ற நாள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க சரித்திரத்தில் என்றும் அழியாப் புகழை பிரதமர் மோடி, தான் செய்த காரியத்தால் பெற்றுள்ளார்.
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்? யாரால் முடியும், எல்லோரும் பண்ண முடியுமா? யாராலும் பண்ண முடியாது. அவருக்கு கடவுளால் எழுதியுள்ளார் பாருங்கள். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். யார், யார் என்னென்ன செய்தார்கள், என்ன சரித்திரத்தில் இருக்கிறது என்று கணக்கு பாருங்கள், யார் செய்தது அதிகமாக இருக்கிறது என்றும் கணக்கு பாருங்கள். மோடி செய்த காரியத்தை சொல்லும் போதே என் கண்ணில் நீர் வருகிறது.
இந்தியாவில் எத்தனை கோயில்கள் இருக்கின்றன? அது எல்லாம் அந்த பகுதியை ஆண்ட மன்னன் கட்டிய கோயிலாகத்தான் இருக்கிறது. இந்தியாவிற்கு மொத்தமாக ஒரு கோயில் எழும்பி இருக்கிறது என்றால், இந்த அயோத்தி ராமர் கோயில்தான். பாண்டிய மன்னர்கள் மீனாட்சி கோயிலைக் கட்டினார்கள், பாண்டிய பரம்பரைகள் எல்லாம் மீனாட்சிக் கோயிலை வணங்கி வந்தது.