சென்னை: சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியதாஸ்,நிஷாந்தினி தம்பதியினர். இவர்களுக்கு பிறந்து 45 நாட்களான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி இவர்கள் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் தான் செவிலியர் தீபா என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர்களுக்கு அரசின் நலத்திட்டம் மற்றும் ஊட்டச்சத்து வாங்கி தருவதாக நிஷாந்தினியை கைக்குழந்தையுடன் ஆட்டோவில் சென்னை தி.நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் குழந்தைக்கு பால், பிஸ்கட் போன்றவற்றை வாங்கி வருமாறு 100 ரூபாயை கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கிய நிஷாந்தியும் குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றிருக்கிறார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த நிஷாந்தினி பல இடங்களில் குழந்தையை தேடியும் கிடைக்காததால், இது குறித்து உடனடியாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.இதையடுத்து போலீசாரின் துரித நடவடிக்கையால் சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து குழந்தையை மீட்டனர்.
இதையும் படிங்க: "தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு"; நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 வரை நீதிமன்றக் காவல்!
ஆனால் குழந்தையைக் கடத்திச் சென்ற தீபா என்ற பெண் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரது புகைப்படங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரது கணவர் ஹரி என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,"தீபாவிற்கு குழந்தை இல்லாததால் எங்கள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இதனால் அவர் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் தீபா கற்பமாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். இதன் பின்னர் தனக்கு திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு என்னை அழைத்தார்.
இதனால் தான் மருத்துவமனைக்கு வந்த போது போலீசார் தன்னை பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீபாவின் தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்திய நிலையில் அவர் ஈரோட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பின்னர் ஈரோடு சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதன் பின்னர் தீபாவை சென்னை அழைத்து வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்