சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவற்றை தழுவி 'Nayanthara' Beyond The Fairytale என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் நாளை ( நவ 18) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபிளில் இன்று திரையிடப்பட்டது.
இந்த சிறப்புக் காட்சியில் இடம் பெற்றுள்ளவை:
- இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா முதல்முறையாக மலையாள படத்தில் அறிமுகமானது.
- தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானது.
- அவரது தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனது.
- கஜினி படத்தில் அவரது உடலமைப்பு பற்றி எழுந்த கிண்டல்கள்.
- சீதையாக நடித்த பிறகு, சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்தது.
- பின்னர் மீண்டு வந்து தொடர்ந்து படங்களில் நடித்தது.
- நானும் ரெளடி தான் படத்தின் மேக்கிங் காட்சிகள் சில உள்ளன.
- நானும் ரெளடி தான் படத்தின்போது விக்னேஷ் சிவன் உடனான காதல்.
- திருமண ஏற்பாடுகள், உயிர், உலக் என இரு குழந்தைகள் பிறந்தது உள்ளிட்டவை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- ஆவணப்படம் 1 மணி 22 நிமிடங்களுக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப் படத்தில் மலையாள இயக்குநர்கள் சத்யன் அந்திக்காடு, பாசில், நடிகர் நாகர்ஜுனா, ராணா, ராதிகா சரத்குமார், இயக்குநர் நெல்சன், அட்லி, விஜய் சேதுபதி ஆகியோர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது அனுபவங்கள் பற்றியும் இந்த ஆவணப்படத்தில் பேசி உள்ளனர்.
விக்னேஷ் சிவன் -நயன்தாரா காதல் குறித்து ராதிகா: 'நானும் ரெளடி தான்' படத்தில் நடித்த ராதிகா அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், அப்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் வயப்பட்டது குறித்தும் பேசிய சில காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் ராதிகா, 'நான் படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது தனுஷ் என்னை தொலைப்பேசியில் அழைத்து உங்களுக்கு மானம் இருக்கா? ரோசம் இருக்கா? வெட்கம் இருக்கா? என்று அவர் கேட்டார். நான் என்ன என்று புரியாமல் திகைத்து போனேன்.
Kovathai adakkuvadhu eppadi Ft. Nayanthara 🤭🦟
— Netflix India South (@Netflix_INSouth) November 17, 2024
Watch Nayanthara: Beyond the Fairytale on 18 November, only on Netflix ✨#NayantharaOnNetflix pic.twitter.com/m8XvjteI5G
'விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள். இது உங்களுக்கு தெரியுமா? இது தெரியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று தனுஷ் கேட்டார். 'அப்போதுதான் எனக்கு தெரியும் அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டிருக்கிறார்களd என்று! என ராதிகா ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நயன்தாரா 'நானும் ரௌடி தான்' பட காப்புரிமை விவகாரம்... நோட்டீஸ் அனுப்பிய தனுஷ் வழக்கறிஞர் கூறுவது என்ன?
நானும் ரெளடி தான் பட காட்சி சர்ச்சை : கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, இயக்குநரின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும், நடிகை நயன்தாரா கதாநாயகியாகவும் (காதம்பரி) நடித்த திரைப்படம் நானும் ரெளடி தான். இத்திரைப்படம் விக்னேஷ் சிவனுக்கு முதல் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மூன்று வினாடி காட்சிகளை தனது ஆவணப்படத்தில் பயன்படுத்த தடையில்லாச் சான்றிதழ் வழங்குமாறு (NOC) நடிகர் தனுஷிடம் கேட்டதற்கு, அவர் அனுமதி அளிக்காமல் இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தி நடிகை நயன்தாரா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், 'ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று வினாடி காட்சிகளுக்கு நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து ரூ.10 கோடி நஷ்டஈடாக கேட்கப்படுகிறது' என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகர் தனுஷ் பேசிய மேடை பேச்சுக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து 'வாழு வாழ விடு' என்ற பதிவையும், எந்த மூன்று வினாடி காட்சிகளுக்கு நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டாரோ அந்த வீடியோவையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நெட்பிளிக்ஸ் விளக்கம்: நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக, நயன்தாரா பகிர்ந்த அறிக்கையினை லைக் செய்து நடிகைகள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று திரையிடப்பட்ட ஆவணப்படத்தில், தனுஷ் தரப்பில் அனுமதி மறுத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து நெட்பிளிக்ஸ் தரப்பில் கேட்டபோது, " இன்று சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டதில் இடம்பெற்ற எல்லா காட்சிகளும் நாளை பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிட்ப்படும் ஆவணப்படத்திலும் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்யப் போகிறார் தனுஷ்?: ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய மூன்று வினாடி காட்சி தொடர்பாக, நடிகர் தனுஷ் தரப்பில் ஏற்கெனவே சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நாளை வெளியாக உள்ள ஆவணப்படத்தில் சர்ச்சைக்குரிய இக்காட்சிகள் இடம்பெறும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து தனுஷ் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்