சென்னை: மத்திய அரசின் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய என்பதை வலியுறுத்தி தென் இந்திய வழக்கறிஞர்களின் சார்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அதிமுக இன்பதுரை: இந்த நிகழ்ச்சியில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேகையில்," இந்த மாநாடுக்கு வேல்முருகன் வந்துள்ளார் வேல்முருகன் என்றால் வெற்றி தான். அதே போல "திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர் இங்கு தான் இருக்கிறார். வழக்கறிஞர் எங்கே இருக்கிறாரோ அங்கே இருப்பார் என்று தான் சொல்கிறேன்.
நான் அரசியல் பேச வரவில்லை.
வழக்கறிஞர் எங்கே இருக்கிறாரோ அங்கு தான் வருவார் என்று சொல்கிறன். திருமாவளவன் நம்மோடு தான் இருக்கிறார். அவர் நம்மோடு தான் இருப்பார் நல்லவர்களுடன் தான் இருப்பார். மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களும் குற்றவாளிகளுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டமாக உள்ளது. ஆகவே இதனை நாம் போராடி திரும்ப பெற வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: திருப்பூரில் வரி உயர்வால் தொழில்கள் முடக்கம்; ஆணையாளரிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு!
அரசியலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை: இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், "இன்பதுரை பேசியது தேர்தல்கான அழைப்பு கிடையாது என்றும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் போராட்டத்திற்கான அழைப்பு. அதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் கிடையாது..
நான் மேடையில் பேசிய கருத்து பொதுவான கருத்து. நாங்கள் தான் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம். இனி ஒரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை எழவில்லை. வேற ஒரு கூட்டணிக்கு போக வேண்டும் வேறு ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இது குறித்து பலமுறை விளக்கம் கொடுத்து விட்டேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்து அமைத்த கூட்டணி தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்க கூடிய கூட்டணி இந்தியா கூட்டணி. ஆகவே இன்னொரு கூட்டணி உருவாக்க வேண்டிய தேவை எழவில்லை" எனத் தெரிவித்தார்.