சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ’கேம் சேஞ்சர்’ நேற்று (ஜனவரி 10) மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தில் ராம் சரணோடு கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். தமிழின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜின் கதைக்கு ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். தில் ராஜு - ஷிரிஷ் படத்தை தயாரித்துள்ளனர்.
படத்திற்கான புரோமோஷன் பணிகள் அமெரிக்காவிலும் ராஜ முந்திரியிலும் மிக பிரம்மாண்டமாக நடபெற்றிருந்தது. ‘இந்தியன் 2’ தோல்விக்குப் பிறகு ஷங்கரும், RRR பட வெற்றியை அடுத்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ராம் சரணும் இணைந்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. அதனால் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகமாக இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கேம் சேஞ்சரின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
சாக்னில்க் (Sacnilk) இணையதளம் அறிக்கையின்படி ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் முதல் நாளில் 51.25 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கில் 42 கோடி வசூல் செய்துள்ள ’கேம் சேஞ்சர்’, அதற்கு அடுத்தபடியாக ஹிந்தியில் 7 கோடி வரை வசூல் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழில் 2.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் கன்னடத்தில் 10 இலட்சமும் மலையாளத்தில் 5 இலட்சமும் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் படம் 186 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.