சென்னை: இந்திய சினிமாத்துறையில் 50 வருடங்களுக்கு மேல் மாபெரும் பாடகராக விளங்கிய பாடகர் ஜெயச்சந்திரன் மறைந்தார். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த பாடகர் ஜெயச்சந்திரன் சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தனது ஆரம்ப காலகட்டத்திலேயே மிருதங்க இசைக் கலைஞரான ஜெயச்சந்திரன், சென்னை வந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு பணி நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பாடினார்.
இதனைத்தொடர்ந்து மலையாள திரைத்துறையில் ஜெயச்சந்திரனுக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1972ஆம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய "நீலகிரியுடே" என்ற பாடலுக்காக கேரள மாநில அரசு விருது கிடைத்தது. தமிழ் சினிமாத்துறையில் ஜெயச்சந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மணிப்பயல் படத்தில் ’தங்கச்சிமிழ் போல்’ பாடல் மூலம் அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய ‘வசந்தகால நதீகளிலே’ பாடல் மிகவும் பிரபலமடைந்தது. ஜெயச்சந்திரன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தனது இசைப் பயணத்தை தொடங்கினாலும், இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. ரஜினிகாந்த் நடித்த ’ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் இவர் பாடிய ‘வாழ்க்கையே வேசம்’ பாடல் மூலம் மனிதர்களிடத்தில் உள்ள விரக்தியான உணர்வை கடத்தியிருப்பார்.
பின்னர் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த கடல் மீன்கள் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் ‘தாலாட்டுதே வானம்’. இப்பாடலில் இடம்பெற்ற இயற்கை சூழலை தனது மென்மையான குரல் மூலம் ரசிகர்களுக்கு கடத்தியிருப்பார். இதனையடுத்து இளையராஜா இசையில் விஜயகாந்த் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ பாடல் மனதை வருடும் மெலடியாக ரசிகர்களை கவர்ந்தது.
ஜெயச்சந்திரன் குரலுக்கு முதல் பெரும் அடையாளமாக இன்று வரை அடையாளமாக விளங்கிய, பாடல் என்றால் வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடலை சொல்லலாம். 80 முதல் தற்போது உள்ள தலைமுறை வரை இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய மூன்று பாடல்களிமே பெரும் வெற்றி பெற்றது.
இளையராஜா இசையில் இதுமட்டுமின்றி கடலோரக் கவிதைகள் படத்தில் இடம்பெற்ற ‘கொடியிலே மல்லியப்பூ’, புன்னகை மன்னன் படத்தில் ‘கவிதை கேளுங்கள்’ என எண்ணிலடங்கா பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார். ஜெயச்சந்திரன், 80களில் கோலோச்சிய இளையராஜா, எம்.எஸ்.வி மட்டுமின்றி அவர்களுக்கு பிந்தைய தலைமுறையான ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். காதலன் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய ‘கொல்லையிலே தென்னை வைத்து’ பாடல் எந்த சூழ்நிலையிலும் மனதை இதமாக்கும்.
அதேபோல் மே மாதம் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய 'என் மேல் விழுந்த' மெலடி பாடலை கேட்டால் மனம் கரையத் தொடங்கும். மேலும் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பூவே உனக்காக படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடல் விஜய் ரசிகர்கள் மனதில் இன்று வரை இடம்பிடித்துள்ளது. அதேபோல் பாபா படத்தில் இடம்பெற்ற ‘ராஜ்யமா’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: "ஒரு தெய்வம் தந்த பூவே"... பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உயிரிழந்தார்! - JAYACHANDRAN PASSED AWAY
ஏ.ஆர்.ரகுமான், ஜெயச்சந்திரன் கூட்டணிக்கு அடையாளமாக விளங்கியது கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல். இப்பாடலை கேட்டால் திடமான மனம் கூட கரையத் துவங்கும். ஜெயச்சந்திரன் கடைசியாக அஜித் நடித்த கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’ பாடலை பாடினார். தனது இனிமையான குரல் மூலம் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இசை ஜாம்பவான் ஜெயச்சந்திரன் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பார்.