சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் "கோட்" (The Greatest Of All Time). ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக கேரளா சென்ற விஜய்க்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும், இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, வைபவ், மோகன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவை சித்தார்த்த நுனி மேற்கொண்டு வருகிறார். படத்தொகுப்பு பணிகளை வெங்கட் ராஜன் மேற்கொள்கிறார்.
அதேபோல், வெங்கட் பிரபு படத்தில் பொதுவாக இருக்கும் நடிகர்கள் எல்லோரும் இந்த படத்திலும் இருப்பார்கள் என கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் விஜய்யின் தோற்றம் புதுப்பொலிவுடன் இப்படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனைப் பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு அதற்கு பதில் அளித்துள்ளார். வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் 'அநியாயம் பண்ணாதீங்க, அப்டேட் மிக விரைவில் நண்பா நண்பீஸ். இது சிறப்பான அப்டேட் ஆக இருக்கும் நம்புங்க' என்று பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:ஜெயம் ரவியின் ஜீனி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! - Jayam Ravi GENIE Movie