சென்னை : இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில், அமிதாப்பச்சன், ராணா டக்குபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது. தற்போது டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஞானவேல், "ரஜினிக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் கோடான கோடி பேர் உள்ளனர். ஜெய்பீம் படம் ரிலீசான பிறகு எல்லா கதவுகளும் எனக்கு திறந்தது. இப்படி ஒரு கதவு திறக்கும் என கற்பனை கூட செய்ததில்லை. சூர்யாவுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.
வேட்டையன் பிறந்த கதை :ஜெய்பீம் கதையை அவர் நடித்து கொடுத்ததால் தான் நான் இந்த மேடையில் நிற்கிறேன். ஜெய்பீம் ரிலீசான இரண்டாவது வாரம் ரஜினியின் மகள் சௌந்தர்யாவிடம் இருந்து மெசேஜ் வந்தது. அப்பாவிற்கு கதை இருந்தா சொல்லுங்கள் என்று.
ஜெய் பீம் படத்தை பார்த்து ரொம்ப நன்றாக உள்ளது என ரஜினி சொன்னதாக சொன்னார். வேட்டையன் கதை ரஜினி செய்தால் நன்றாக இருக்கும் என சௌந்தர்யா கேட்ட பிறகு எனக்கு திரும்ப திரும்ப தோன்றியது. ரஜினி ஒரு நாள் என்னிடம் பேசி கதை பிடித்திருக்கிறது என்றார். உடனே எழுத ஆரம்பித்து விட்டேன்.
இதையும் படிங்க :"நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்" - வேட்டையன் ரஜினி குறித்து அமிதாப்பச்சன் பெருமிதம்! - vettaiyan audio launch
சீன் எழுதும் பொழுது ரஜினி படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த சீன் படையப்பா படத்தில் வரும் ஊஞ்சல் சீன் தான். அந்த காட்சியை அடிக்கடி பார்த்துக்கொள்வேன். ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதினால் அது அவருக்கு தான். அது இன்னொருத்தருக்கு செட் ஆகுமா?. அவருக்கு எழுதினாலே அது மாஸா தான் எழுத முடியும்.
ரஜினி என்கிற கோல்டன் வீசா என்னிடமிருந்தது. இரண்டாவது லைகா நிறுவனம். இன்னோரு கோல்டன் வீசா அமிதாப்பச்சன். அமிதாப்பச்சனிடம் கதை சொன்ன போது நான் வருகிறேன் என அவர் இந்த படத்தில் நடித்து கொடுத்தார்.
வேட்டையன் கதையை எழுதும் பொழுது பான் இந்தியா படமாக இருக்கும் என நான் எழுதவில்லை. கதைதான் இத்தனை நடிகர்களை தேர்வு செய்தது. போன அக்டோபர் மாதத்தில் படத்தை ஆரம்பித்தோம். இந்த அக்டோபரில் படம் ரிலீஸ் ஆகிறது.
இருவரும் சரியான நேரத்தில் வருவார்கள், கேரவனுக்கு போகமாட்டார்கள், மற்ற நடிகர்களை வைத்து ஒரு நாளைக்கு ஒரு காட்சிகளை மட்டும் தான் எடுக்க முடியும் என்றால் இவர்கள் இருவரை வைத்து ஒரு நாளைக்கு மூன்று காட்சிகளை கூட எடுக்க முடியும்.
கருத்துள்ள பொழுதுபோக்காக பிரமாண்டமான படமாக வேட்டையன் வரும் என செய்தியாளர்களிடம் ரஜினி கூறினார். அதை நான் நிறைவேற்றியுள்ளேன் என நினைக்கிறேன். ரஜினி தான் நடிக்கும் சீன்களில் என்னுடைய ரசிகர்களுக்கு இது பிடிக்குமா, எப்படி பார்ப்பார்கள் என பார்த்து பார்த்து நடிப்பார். ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என பார்த்து நடித்த ரஜினியை ஒரு யுனிவர்சிட்டியாக தான் நான் பார்த்தேன்" என பேசினார்.