சென்னை: ’வீர தீர சூரன்’ திரைப்படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் அருண்குமார் கூறியுள்ளார். அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'. விக்ரமின் ஆக்ஷன் அவதாரத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
விக்ரம் முழு ஆக்ஷன் படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆன நிலையில், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார் விக்ரமுடன் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முற்றிலும் வித்தியாசமாக இப்படத்தின் முதல் பாகத்திற்கு பதிலாக இரண்டாம் பாகம் தற்போது வெளியாகிறது. இப்படத்தின் டீசர் யூடியூபில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
அதேபோல் இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் இடம்பெறும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். முன்னதாக வீர தீர சூரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கியது குறித்து இயக்குநரை எஸ்.ஜே.சூர்யா பாராட்டி பதிவிட்டிருந்தார். இந்நிலையில் வீர தீர சூரன் திரைப்படம் வரும் ஜனவரி மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் அருண்குமார் நேர்காணலில் பேசியுள்ளார்.