சென்னை:தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களுள் ஒருவர் மணிரத்னம். ஒரு இயக்குநராக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் இவர். கடைசியாக, இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம், தமிழ் திரையுலகின் நீண்ட நாள கனவை நினைவாக்கிய சாதனையும் படைத்தார்.
இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் புதிய படம் 'தக் லைஃப்' (Thug Life). இது நடிகர் கமல்ஹாசனின் 234வது படமான இப்படத்தின் மூலம் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'தக் லைஃப்' படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக, இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகின. இதனிடையே, துல்கர் சல்மானுக்குப் பதிலாக நடிகர் சிம்பு படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தைக் குறிப்பிடும் போஸ்டர் ஒன்றைப் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டது.