தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த 2020-21ஆம் ஆண்டு பருவத்தில் ரூபாய் 28 லட்சத்து 35 ஆயிரம் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக 88 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) கார்த்திகைசாமி, 88 ஊழியர்களுக்கும் பணி நீக்க உத்தரவை அனுப்பியுள்ளார். அந்த பணிநீக்க உத்தரவில் கூறியிருப்பதாவது;
கடந்த 2020-21ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தின் போது விழிப்பு பணி அலுவலர்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது ஊழியர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ரூபாய் 28 லட்சத்து 35 ஆயிரம் வரை தொகை இழப்பு ஏற்படுத்தியது தெரிய வந்தது. மேலும் இழப்பினை சரி செய்யும் நோக்கில் சேமிப்பு கிடங்குகளில் பணியாற்றும் கணினி இயக்குபவர்கள் மூலம் பிள்ளையார்பட்டி, புனல்குளம், மற்றும் சென்னம்பட்டி ஆகிய கிடங்குகளில் எடை குறைவாக ஒப்படைக்கப்பட்ட நெல்லுக்கான ஒப்புதல் ரசீதை கணினி மூலம் திருத்தம் செய்து போலியான ஒப்புதல் சீட்டு தயார் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவையாறு ஐயாரப்பர் கோயில் கும்பாபிஷேகம்! - THANJAVUR THIRUVAIYARU TEMPLE
இதையடுத்து 37 பருவகால பட்டியல் எழுத்தர்கள், 51 பருவகால உதவியாளர்கள் என 88 ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி, தொடர்புடைய நபர்களை கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கணினி மூலம் போலியான ஒப்புதல் சீட்டு தயார் செய்த 88 பேரையும் கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது