தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு மற்றும் வனத்துறை சார்பில் கடற்பசு பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் வலையில் கடற்பசுக்கள் அவ்வப்போது சிக்கி வருகின்றன.
இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது மீன்பிடி வலையில் சுமார் 7 அடி நீளமுள்ள பெரிய அளவிலான கடற்பசு ஒன்று மாட்டிக் கொண்டது.
இதனையடுத்து மீனவர்கள் பத்திரமாக கடற்பசுவை கரைப் பகுதிக்கு கொண்டு வந்து மீன்பிடி வலையை வெட்டி அறுத்து அதனை நல்ல நிலையில் பத்திரமாக ’கடலுக்குள் ஓடுடா ஓடுடா செல்லம்’ என்று விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: வால்பாறை அருகே யானை தாக்கியதில் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழப்பு! - ELEPHANT ATTACK GERMANY TOURIST
கடற்பசுவை பத்திரமாக கடல் பகுதிக்கு விட்ட மீனவர்களுக்கு பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் மீனவர்களை பாராட்டி வனத்துறை சார்பில் விரைவில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் கடற்பசுவை பாதுகாக்கும் வகையில் மீனவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது