சென்னை: கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக 'கர்ணன்', 'மாமன்னன்' என தொடர்ந்து வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தைத் தயாரிக்கிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் பணிகள் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கபடி விளையாட்டை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் அனைத்துத் தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும் வாழ்வியலாகக் கொண்ட இளைஞனின் கதையைச் சொல்கிறது. இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'பிரேமம்', 'குரூப்' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
திரைப்படத்தைப் பற்றி அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் பேசுகையில், '' இந்தக் கூட்டணி ஒரு அசாதாரணமான விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்துடன் தொடங்கி, தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்வதில் எங்களது அர்ப்பணிப்பைச் சுட்டிக் காட்டுகிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் திறமை மற்றும் திறன்மிகு தொழில்நுட்பக் குழுவினரின் ஆதரவுடன் தென்னிந்தியச் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது'' என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ''பரியேறும் பெருமாள், பா ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இந்தப் படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது.