சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையுடன் வலம் வருபவர். ப.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் முத்திரை பதித்தார். இந்த நிலையில், தற்போது அவரது 50வது படமான ராயன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். மேலும், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த நிலையில், இன்று படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே, படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி, அமுத பாரதி என்பவர், “இது சாதாரண பழிவாங்கும் கதைதான். அதனை தனுஷ் நன்றாக எழுதி இயக்கியுள்ளார். இடைவேளை காட்சி, இரண்டாம் பாதியில் சில காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ், பாடல் திரையரங்குகளில் நிச்சயம் அதிரும். ஏ.ஆர்.ரகுமான் இசை படத்திற்கு மற்றுமொரு ப்ளஸ்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சந்தீப், துஷாரா உள்ளிட்டோரின் நடிப்பு, கேமரா ஒர்க் தனுஷின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக திரையரங்குகளில் பார்க்கக்கூடிய படமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ் ஒரு இயக்குனராக அழுத்தமான படத்தை கொடுத்துள்ளார் என்று ஸ்ரீதர் பிள்ளை பதிவிட்டுள்ளார். கேமராமேன் ஓம் பிரகாஷின் கேமரா ஒர்க், ரகுமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸாக இருப்பதாகவும், தனுஷ் சிறந்த ஆல்ரவுண்டர் என்றும், அனைவரது நடிப்பும் சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், வன்முறை அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.