சென்னை: இயக்குநர் எஸ்.ஏ விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள படம் 'அரிசி'. இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது.
கதை களம் என்ன? : இப்படம் குறித்து படக்குழு கூறுகையில், நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட், நம் பாரம்பரியத்தை, நாம் அறியாமலே அழித்து வருகிறது என தெரிவித்துள்ளது.
நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஒரு அழுத்தமான திரைக்கதையுடன், ஆழமான படைப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ விஜயகுமார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி முதன்முறையாக திரையில் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இக்கால சூழலுக்கு ஏற்ப நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.