தூத்துக்குடி:முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தனியார் சேனலில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 (Bigg Boss season 8) நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முத்துக்குமரன் நேற்று (ஜன.24) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
முன்னதாக மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை தரிசனம் செய்த அவர், பின் மகா மண்டபத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அதைத் தொடர்ந்து, அங்கேயே சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த முத்துக்குமரனுடன் பக்தர்கள், பொதுமக்கள், கோயில் பணியாளர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கொண்டனர்.
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த முத்துக்குமரன் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:”எனது திரை வாழ்விலேயே இதுதான் சிறந்த படம்”.. ’மதகஜராஜா’ வெற்றிக்கு உருக்கமாக நன்றி சொன்ன விஷால்
அப்போது, முத்துக்குமரன் எந்தவித தயக்கமும் காட்டாமல் ரசிகர்களின் குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். பின்னர், அவரது வருகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியைத் தரிசனம் செய்தேன். திருச்செந்தூர் முருகன் அருளால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுள்ளேன். அதனால், முருகனுக்கு நன்றி கூறுவதற்காகத் திருச்செந்தூர் வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.