சென்னை:மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பா. ரஞ்சித், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாரத் இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்ட அந்த புகார் மனுவில் "இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்துக் கடவுள் குறித்து அவதூறு பரப்பி வரும் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் யுவராஜ் கூறுகையில், "சினிமா இயக்குநரான பா.ரஞ்சித் சமீபத்திய காலங்களில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்து இருந்தார். அதில் "நான் படித்த பள்ளியின் எதிரே ஒரு நந்தி இருக்கும். அந்த கல் மீது ஏறினால் வானத்தை நோக்கி பறந்து விடலாம் என கூறுவர்.
அதன்மேல் ஏறி நின்று வானத்தில் பறக்கிறேனா, இல்லையா என்று முயற்சி செய்தேன் என கூறியுள்ளார். மேலும் புத்தகம் என்பது சரஸ்வதி அது மீது உட்கார்ந்தால் படிப்பு வராது என கூறுவார்கள். ஆனால் நான் வேண்டுமென்றே புத்தகத்தின் மீது ஏறி உட்கார்ந்து பார்ப்பேன் என்றும், அப்புறம் பாம்பு புற்றில் உள்ள முட்டைகளை எடுத்து குடித்துத்துள்ளேன்" என தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் நந்தி வடிவில் எம்பெருமான் ஈசனை வணங்கி வருகின்றனர்.படிப்புக்கு தாயாக விளங்கும் சரஸ்வதி தேவியை புண்படுத்தி உள்ளார். ஏனென்றால் ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் புத்தகங்களை வைத்து மக்கள் வணங்குகின்றனர்.
பா.ரஞ்சித்தின் இத்தகைய கருத்துக்கள் பக்தர்கள் மற்றும் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்து மதத்தையும், இந்துக்கள் மனத்தில் ரணத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் ரஞ்சித் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட யூடியூப்பில் இருந்து அவர் பேசிய வீடியோவை நீக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தளபதியை என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க.. கோட் படத்தின் 'ஸ்பார்க்' குறித்து ரசிகர்கள் சொல்வதென்ன?