சென்னை: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள திரைப்படம் DNA. இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன், விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார். DNA திரைப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளர். விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
ஏற்கனவே இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் ’கண்ணே கனவே’ பாடல் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் படத்தில் உள்ள 5 பாடல்களுக்கு சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சாஹி சிவா மற்றும் அனல் ஆகாஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர். இந்த முயற்சி இப்படத்தின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அக்டோபர் வரை நோ சினிமா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்குமார்!
மேலும் முன்னணி இசையமைப்பாளரான ஜிப்ரான் வைபோத இப்படத்ததிற்கு பின்னணி இசையமைக்கிறார். இந்நிலையில் DNA திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் மெதுவாக நேரெதிர் கதாபாத்திரங்களான அதர்வாவையும் நிமிஷாவையும் காட்டும் டீசர் அதன்பின் விறுவிறூப்பான கிரைம் த்ரில்லர் ஆக்ஷன் டீசராக மாறுகிறது. குற்றமும் குற்றத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களுமாக டிஎன்ஏ திரைப்படம் இருக்கும் என டீசர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
'ஒரு நாள் கூத்து', எஸ்.ஜே.சூர்யா மாறுபட்டு நடித்த 'மான்ஸ்டர்' மற்றும் 'ஃபர்ஹானா' ஆகிய படங்களை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதர்வா நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் வரவேற்பை பெறாத நிலையில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.