சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ’DD Next Level’ படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இருவரும் கலகலப்பாக ப்ரோமோவை உருவாக்கியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த ’டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சந்தானம் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த ’தில்லுக்கு துட்டு’ படங்களின் வரிசையில் இது மூன்றாவது படம். இந்த படத்தில் சந்தானத்தோடு சுரபி, FEFSI விஜயன், பிரதீப் சிங், ’நான் கடவுள்’ ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனீஷ்காந்த், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த ’தில்லுக்கு துட்டு’ வரிசை தொடர் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next level) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் பிரேம் ஆனந்த் தான் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி படத்தில் இவ்வளவு வித்தியாசமான நடிகர்கள் நடிப்பது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் 26ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையொட்டி வெளியான பாடலின் ப்ரோமோ வீடியோவில் சந்தானமும் ஆர்யாவும் ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைகளை மீண்டும் ரசிகர்களுக்கு கொடுக்கும் விதமாக மாறி மாறி பேசுகின்றனர்.