சென்னை: 2025ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிவடையப் போகின்றன. தமிழ் திரையுலகில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கமான பொங்கல் பண்டிக்கைக்கு எந்தவித பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் வெளியாகாததால் திரையரங்க உரிமையாளர்களில் இருந்து பலரும் வருத்தமடைந்தனர்.
ஆனால் அதன்பின் வெளியான படங்களில் ’குடும்பஸ்தன்’, ’டிராகன்’ ஆகிய இரு படங்களே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இவை இரண்டும் பட்ஜெட்டை விட அதிகமான லாபம் ஈட்டியுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் மாதம் ஒன்றாக வெளியாகவிருக்கின்றன. கடந்த ஆண்டு இப்படியான வெளியீடுகள் பெரிதாக இல்லை. அந்த வகையில் 2025இல் எதிர்பார்க்கப்படும் படங்கள் குறித்து இச்செய்தியில் காணலாம்.
வீர தீர சூரன் பாகம் 2: ’தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்கு பிறகே முதல் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த வித்தியாசமான பாணி மற்றும் ‘சித்தா’ படத்திற்கு பிறகு SU அருண் குமார் இயக்கியுள்ள படம் போன்றவற்றால் படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்த படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு டீசம்பர் மாதம் ’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஜனவரி மாதம் பொங்கலுக்கே வெளியிட திட்டமிட்டிருந்த இப்படமானது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தால் தள்ளிப் போய் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
குட் பேட் அக்லி: ’விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ’குட் பேட் அக்லி’ (Good Bad Ugly). மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் வித்தியாசமான சால்ட் அனண்ட் பெப்பர் லுக்கை வெளியிட்டதிலிருந்து படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.
ஏற்கனவே மார்க் ஆண்டணி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்திலிருந்து கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாக தொடங்கியிருக்கிறது. இத்திரைப்படமும் பொங்கள் வெளியீடாகவே முதலில் திட்டமிடப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் தற்போது ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இட்லி கடை: ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படம் ’இட்லி கடை’. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் (Dawn pictures) சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
#Idlykadai first look ♨️@dhanushkraja @RedGiantMovies_ @gvprakash @MenenNithya @AakashBaskaran @thesreyas @wunderbarfilms @editor_prasanna @Kiran10koushik @jackie_art @kavya_sriram @kabilanchelliah @MShenbagamoort3 @teamaimpr #DawnPictures #IdlyKadai #DD4 pic.twitter.com/2ItlM6tAwD
— DawnPictures (@DawnPicturesOff) January 1, 2025
இப்படத்தில் தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படமும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது.
ரெட்ரோ: ’கங்குவா’ திரைப்படத்திற்கு பின்பு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ரோ’ (Retro). கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா என எதிர்பாராத கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரில் இருந்தே எதிர்பார்ப்பு எகிற தொடங்கி விட்டது. இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா எதிர்பார்த்த வெற்றியை பெறததால் ரெட்ரோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இத்திரைப்படம் கோடை வெளியீடாக மே 1ஆம் தேதி திரையரங்கிற்கு வருகிறது.
தக் லைஃப்: 34 ஆண்டுகளுக்குப் பின்பு மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப் (Thug life). மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பில், உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ’நாயகன்’ கல்ட் கிளாசிக் திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி தற்போது இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜுன் 5ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க: ”விஜய்யும் நானும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம்”... ரகசியம் உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
மேலே பார்த்த திரைப்படங்கள் அனைத்தும் வெளியீட்டு தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இவை இல்லாமல் இந்த வருடம் வெளியாகவிருக்கும் திரைப்படங்களான பிரதீப் ரங்கநாதனின் டைம் டிராவல் காதல் கதையான 'லவ் இன்சூயூரன்ஸ் கம்பெனி', ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி', கார்த்தியின் 'வா வாத்தியார்', 'சர்தார் 2' ஆகியவை மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இவற்றில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.