சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். அட்டகத்தி படத்தில் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படங்களின் மூலம் குறிப்பிடத்தக்க ரசிகர்களைப் பெற்றுள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படங்களாக இருக்கும். மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்கள் இவரது இயக்கத் திறமைக்குச் சான்றாக அமைந்த படங்களாகும்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் தயாரித்து, இயக்கிய திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்து இருந்தார். மேலும் நடிகர் பசுபதி, துஷாரா விஜயன், ஷபீர், ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.
இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. 1960களில் சென்னையில் பிரபலமாக இருந்த சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை ஆகிய இரண்டு குழுவினரின் இடையே நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
ஓடிடியில் வெளியானாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆர்யா, பசுபதி உள்ளிட்ட அனைவரது நடிப்பும் பேசப்பட்டது. அக்காலத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.