Celebrity Cricket League 2024 சென்னை:ஆண்டுதோறும் இந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விளையாடும் சிசிஎல் (CCL - Celebrity Cricket League) கிரிக்கெட் போட்டியின் 10வது சீசன் இந்த ஆண்டு இம்மாதம் 23ம் தேதி சார்ஜாவில் தொடங்குகிறது. சென்னை ரைனோஸ், கேரளா ஸ்டிக்கர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், போஜ்புரி தபாங்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷெர் என 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.
இந்திய திரையுலக நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் இந்த கிரிக்கெட் தொடரில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் இந்த வருடத்திற்கான சிசிஎல் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 23ம் தேதி சார்ஜாவில் தொடங்குகிறது. இதில் சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரம், போஜ்புரி உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.
நடிகர் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வென்று விட வேண்டும் என்ற உற்சாகத்தில் உள்ளது. இது குறித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகர்கள் ஆர்யா, பரத், சாந்தனு உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, திரையுலகினர் கலந்து கொண்டு விளையாடும் நட்சத்திர விளையாட்டு நிகழ்வான ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (Celebrity Cricket League - CCL) பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 17 ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. சார்ஜா, ஹைதராபாத், திருவனந்தபுரம் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் 19 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டி 10வது சீசன் சென்னை ரைனோஸ் அணிக்கு முக்கிய போட்டியாக உள்ளது. ஏற்கனவே 2 முறை கோப்பையை கைப்பற்றியிருந்தாலும், அது பல வருடம் ஆகிவிட்டது. எனவே இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நிச்சயமாக வெல்வோம் என்று நடிகர் பரத் தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டிலும் சென்னை ரைனோஸ், 2013 மற்றும் 2014இல் கர்நாடகா புல்டோசர்ஸ், 2015, 2016 மற்றும் 2017இல் தெலுங்கு வாரியர்ஸ், 2019இல் மும்பை ஹீரோஸ் அணியும் வெற்றி பெற்றது. 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் சிசிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. கடந்த ஆண்டு 2023இல் நடைபெற்ற போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:விஜய் இடத்தை நான் பிடிப்பேனா? - நடிகர் ஜெயம் ரவி சுவாரஸ்ய பதில்!