புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக-காங்கிரஸ் எம்பிக்கள் மோதிக்கொண்டபோது சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு பணியில் எந்த குறைபாடும் இல்லை என அந்தப் படை விளக்கம் அளித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் கடந்த 17ஆம் தேதி இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்," என்று கூறியிருந்தார்.
இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என்று கூறி அமித்ஷா மன்னிப்புக் கேட்பது மட்டுமின்றி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். டிசம்பர் 19ஆம் தேதியன்று காலையில் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே பாஜக கூட்டணி, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தனித்தனியே நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வு வேண்டாம்...வேறு தேதியில் நடத்த தமிழக அரசு கோரிக்கை!
அப்போது இருதரப்பு எம்பிக்களும் மோதிக்கொண்டதாக பரபரப்பு எழுந்தது. ராகுல் காந்தி தள்ளி விட்டதாக பாஜக எம்பிக்கள் இருவர் கொடுத்த புகாரின் பேரில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு குறைபாடு காரணமாக எம்பிக்கள் மோதல் நடைபெற்றுள்ளது என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐஎஸ்எஃப் துணை ஐஜி(செயல்பாடுகள்) ஸ்ரீகாந்த் கிஷோர், "நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டபோது சிஐஎஸ்எஃப் படை அமைதி காத்தது. இந்த விவகாரம் குறித்து நாங்கள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இதில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. எந்த ஒரு ஆயுதமும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை,"என்று கூறினார்.
வீடு திரும்பிய எம்பிக்கள்: இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தின்போது காயம் அடந்தை பாஜக எம்பிக்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மருத்துவர் சுக்லா, "எம்பி சாரங்கி இங்கு அனுமதிக்கப்பட்டபோது அவரது காயத்தில் இருந்து ரத்தம் வந்தது. நெற்றியில் காயம் அடைந்த பகுதியில் அவருக்கு தையல் போடப்பட்டது. பின்னர் அவர் குணம் அடைந்தார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.
எம்பி ராஜ்புத்துக்கும் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் இங்கு அவர் அழைத்து வரப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்தார். அவரது ரத்த அழுத்தமும் அதிகமாகி இருநதது. இப்போது அவரும் குணம் அடைந்து வீடு திரும்பினார்,"என்றார்.