சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளி விழா கலையரங்கத்தில தேசிய மருந்தாளுநர் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டு மலரை வெளியிட்டும், சிறந்த மருந்தாளுநர்களுக்கும், மருத்துவம் சார்ந்த பல்வேறு துறையில் உள்ள மருத்துவ வல்லுனர்களுக்கும் மற்றும் மருந்தியல்
மாணவார்களுக்கும் பதக்கங்களையும், சான்றிதழ்களும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார்.
விழாவில் அவர் பேசும்போது, "தேசிய மருந்தாளுநர் மாநாடு இதுவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடத்தப்பட்டதில்லை. முதன்முறையாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மரு.நாராயணசாமி முன்னெடுப்பில் நடத்தப்பட்டு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாநாடாக அமைந்துள்ளது. 1500த்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட மருந்தியில் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகள் அரிதான நோய்களை குணப்படுத்துகின்றன. எனவே, புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு குறித்த ஆராய்ச்சி தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்கள் தற்போது தமிழ்நாட்டின் மருத்துவ திட்டத்தை நகல் எடுக்க தொடங்கி உள்ளன. மற்ற நாடுகளிலும் தமிழ்நாட்டின் மருத்துவ முறையை முன்னெடுக்க
முனைந்துள்ளன." என்று அமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்த அரசு பொறுப்பேற்றபிறகு மருத்துவத் துறையில் பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐநாவில் தொற்றா நோய்க்கான சிறந்த மருந்தை கொடுக்கும் மாநிலம் என தமிழ்நாட்டை கண்டறிந்து விருது வழங்கப்பட்டது, இது உலகின் உச்சபட்ச விருது.
தொற்றா நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் கட்டுக்குள் உள்ளது. பெரிய உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. முதல் பார்மஸி கல்லூரி தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். இங்கு படித்த மாணவர்கள் உலகத்தில் சாதனை புரிந்து வலம் வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அரசு பார்மஸி கல்லூரிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ள காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, பார்மஸி கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
அரசு கல்லூரிகளில் படித்த எனக்கு அரசு தான் வேலை தர வேண்டும் என்ற மனப்போக்கு மாணவர்களிடையே உள்ளது, அது தவறில்லை, ஏராளமான தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளன. அதனையும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். தற்போது படிக்கும் மருத்துவ மாணவர்களின் தகுதி, திறமையை கொண்டு
படிப்பை முடித்த பின் அவர்களுக்கான காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 24,000 மருத்துவம் சார்ந்த பணிநியமனங்கள் முறையாக நடைபெற்றிருக்கின்றன. மேலும் கலந்தாய்வு மூலம் 34,000த்திற்கும் மேற்பட்ட பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 5. 1.2025 அன்று 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 1000 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் . எனவே மக்கள் மருந்தகத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 Generic மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில் அப்பணிகள் முடிவுற்றபிறகு தமிழ்நாட்டில் 1000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும். கூட்டுறவுத்துறையும், சுகாதாரத் துறையும் ஒருங்கிணைந்து இச்சேவை தொடங்கப்படவிருக்கிறது." என்று தெரிவித்தார்.