சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வருடம் 220க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் 20க்கும் குறைவான படங்களே வெற்றி பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' (Greatest of all time) திரைப்படம் இந்த வருடம் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. கோட் திரைப்படம் உலக அளவில் 457.12 கோடி வசூல் செய்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 225.01 கோடி வசூல் செய்து முதலிடம் பிடித்துள்ளது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ’அமரன்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த படம் உலகளவில் 333.57 கோடியும், தமிழ்நாட்டில் 167.81 கோடியும் வசூல் செய்துள்ளது. ’அமரன்’ திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைவாழ்வில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது. அதனைத்தொடர்ந்து 3வது இடத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’வேட்டையன்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ’வேட்டையன்’ திரைப்படம் உலகளவில் 253.69 கோடியும், தமிழ்நாட்டில் 123.89 கோடியும் வசூல் செய்துள்ளது.
வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் வேட்டையன் திரைப்படம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் ’ராயன்’, ’அரண்மனை 4’, ’மகாராஜா’ ஆகிய படங்கள் இடம்பெறுள்ளது. இந்த வருடம் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்ற நிலையில், அவரது 50வது திரைப்படமான ராயன் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
திரைப்படம் | உலக அளவில் வசூல் | தமிழ்நாடு வசூல் |
கோட் | 457.12 | 225.01 |
அமரன் | 333.57 | 167.81 |
வேட்டையன் | 253.69 | 171.69 |
ராயன் | 154 | 80.13 |
அரண்மனை 4 | 98.75 | 60.23 |
மகாராஜா | 165.5 | 57 |
இந்தியன் 2 | 148.9 | 56.65 |
புஷ்பா 2 | 1467.8 | 54.05 |
அயலான் | 76.64 | 49.81 |
கருடன் | 61 | 43.95 |
அரண்மனை 4 திரைப்படம் தமிழில் இந்த வருடத்தின் முதல் ஹிட் படமாக அமைந்தது. மகாராஜா உலகளவில் 165.5 கோடி வசூல் செய்த நிலையில், தமிழ்நாட்டில் சற்று குறைவாக 57 கோடி மட்டுமே வசூல் செய்தது. இந்த வரிசையில் 7வது இடத்தில் ’இந்தியன் 2’ திரைப்படம் இடம்பெற்றுள்ள நிலையில், ’புஷ்பா 2’ திரைப்படம் 8வது இடம் பிடித்துள்ளது. இந்தியன் 2 எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரஞ்சித்... சர்ப்ரைஸ் கொடுத்த அவரது மனைவி யார் தெரியுமா? - BIGG BOSS 8 TAMIL
மற்றொரு புறம் ’புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், தமிழில் மொழியில் குறைவான வசூலையே பெற்று வருகிறது. இந்த டாப் 10 வரிசையில் கடைசி இரண்டு இடங்களை ’அயலான்’ மற்றும் ’கருடன்’ ஆகிய படங்கள் பெற்றுள்ளது.