சென்னை: 2021ஆம் ஆண்டு கொரோனா 2வது அலை தணியத் தொடங்கிய போது ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. லாக் அப் மரணம், சிறையில் நடக்கும் சித்ரவதைகள், சாதி ரீதியான பாகுபாடு என ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்த திரைப்படம். இத்திரைப்படத்தை மையமாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் பெரும் விவாதம் எழுந்தது. இன்னும் குறிப்பாக குறவர் எனும் சமுதாயம் தமிழ்நாட்டில் எந்த நிலையில் நடத்தப்படுகிறது என்பதையும் எடுத்துக் கூறுவதாக இருந்தது.
"நான் நிருபராக பணியாற்றியவன். நீதிமன்றங்களில் செய்தி சேகரித்த போது, கிடைத்த அனுபவங்கள் தான் இந்த திரைப்படத்தை இவ்வளவு தரவுகளோடு துல்லியமாக எடுக்க காரணமாக அமைந்தது." இது ஜெய்பீம் வெளியான போது டி.ஜே.ஞானவேல் கூறிய வார்த்தைகள். ஜெய்பீம் வெளியாகி சரியாக 3 ஆண்டுகள் ஆகின்றன. வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அன்று பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்த ஞானவேலை பாராட்டிய அதே நபர்கள் தான் இன்று அவரை விமர்சிக்கவும் செய்கின்றனர்.
வேட்டையன் திரைப்படத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள பழனிவேலு ஈடிவி பாரத்திடம் பேசுகையில், ஜெய்பீம் திரைப்படத்திற்காக சமூக வலைத்தளங்களில் பாராட்டி எழுதியவர்களில் நானும் ஒருவன் தான். ஆனால், இப்போது போலீஸின் என்கவுன்டரை நியாயப்படுத்தி படம் எடுக்கிறார். பணம், புகழுக்காக இயக்குநர் ஞானவேல் மாறிவிட்டார்” என குற்றம் சாட்டுகிறார்.
வேட்டையன் திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் டிரெய்லர் தன்னை மிகவும் பாதித்துள்ளதாக பழனிவேலு கூறுகிறார். டிரெய்லரைப் பொறுத்தவரையிலும் என்கவுன்டர் செய்து குற்றவாளிகளைக் கொல்லுவதை நியாயப்படுத்துவது போல வேட்டையன் திரைப்படம் காட்சிப்படுத்துவதாக குற்றம்சாட்டிய பழனிவேலு, இதனை அனுமதித்தால் பொதுமக்கள் சட்டத்தை மதிக்க மாட்டார்கள் என கவலை தெரிவித்தார்.
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியான டிரெய்லரில் ரஜினிகாந்த் பேசியுள்ள, “போலீஸ் அமைதியாக இருப்பதை விட அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை” என்ற வசனம் இத்திரைப்படம் கஸ்டடி கொலைக்கு ஆதரவானது என குற்றம்சாட்டுவதற்கு மூல காரணமாக உள்ளது. பழனிவேலுவின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ’வேட்டையன்’ திரைப்படம் நாளை (10.10.2024) வெளியாகிறது.
வேட்டையன் திரைப்படம் தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய மனித உரிமை ஆர்வலரான ஹென்றி திபேன், "இத்திரைப்படத்தில் ஞானவேலின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. என்கவுன்டர் பொது விவாதத்திற்கு வர வேண்டும் என செய்கிறாரா? அல்லது அதனை ஊக்கப்படுத்துவதற்கு செய்கிறாரா என தெரியவில்லை. ஆனால் திரைப்படம் வெளியாகும் போது இது மிகப்பெரிய விவாதமாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது" என குறிப்பிட்டார்.