ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ வெளியீட்டின் போது கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தகுந்த உதவி செய்வதாக அல்லு அர்ஜூன் சார்பில் கூறப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது புஷ்பா 2. கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ’புஷ்பா 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
புஷ்பா முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தேசிய விருது வென்றனர். புஷ்பா 2 திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ரசிகர்களுடன் நேற்று சிறப்புக் காட்சியை கண்டுகளித்தார். அப்போது அல்லு அர்ஜூனை பார்க்க கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அங்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜ்(9) இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்ததாகவும், அப்போது, ரசிகர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் இருவரும் கால்களுக்கு இடையே நசுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் காரணமாக இருவரும் சுய நினைவின்றி இருந்துள்ளனர். பின்னர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.