சென்னை: அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அசர்பைஜான் நாட்டில் அஜித் பயணம் செல்லும் போது அவரது மனைவி த்ரிஷாவை கேங்ஸ்டர் கூட்டம் கடத்துகின்றனர். இதனைத்தொடர்ந்து அஜித் அவர்களிடமிருந்து த்ரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதை மையக்கதையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றும், அந்த படக்குழுவினரிடம் காப்புரிமை வாங்காததால் விடாமுயற்சி பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவியது. வரும் 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் நிலையில், படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் ஆரவ் ஆகியோர் தீவிர புரமோஷனில் இறங்கியுள்ளனர்.