கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்துக் கொடுத்து நகையை பறித்துச் சென்ற சம்பவத்தில், ஆனைமலை போலீசார் இரண்டு பெண்களை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து நான்கரை பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை குயவர் வீதியைச் சேர்ந்தவர் சாந்தி (56). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் லோகநாயகி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், லோகநாயகி, மகேஸ்வரி என்பவருடன் சேர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவில் பணம் வாங்கித் தருவதாக கூறி சாந்தியை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர்.
மூவரும் நா.மு.சுங்கம் பேக்கரிக்குச் சென்றுள்ளனர். அங்கு லோகநாயகியும், மகேஸ்வரியும் சேர்ந்து, குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து சாந்திக்கு கொடுத்துள்ளனர். இதில், சாந்தி மயக்க நிலை அடைந்தவுடன் அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றிக்கொண்டு அவரை உடுமலைப்பேட்டை அருகே விட்டுச் சென்றுள்ளனர். உடுமலைப்பேட்டை அருகே மயக்க நிலையில் கிடந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தீவிர குற்றம்! வாகனங்களை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி!
அங்கு, சாந்தி மயக்கம் தெளிந்தவுடன் தான் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து, லோகநாயகி மற்றும் மகேஸ்வரி மீது கடந்த 30ஆம் தேதி ஆனைமலை காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதில், பதுங்கி இருந்த லோகநாயகி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரையும் ஆனைமலை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், நகையை பறிப்பதற்காக குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக, ஆனைமலை தனியார் மெடிக்கல் கடையில் மயக்க மருந்தை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து நான்கரை பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.