சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக அஜர்பைஜானில் ஒரு ஷெட்யூலை முடித்து படக்குழு நாடு திரும்பியது. நாளை மறுநாள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இருந்து மற்ற நடிகர்களின் அறிமுக புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஆனால், படத்தின் வெளியீட்டு தேதி தற்போது வரை வெளியிடப்படவில்லை. எப்படியும் இந்தாண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா, அஜித் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அஜித்தால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன் என்று அடிக்கடி சொல்பவர் அவர். தற்போது பிஸியான நடிகராக மாறிவிட்ட நிலையில், அஜித்துடன் புகைப்படம் எடுத்துள்ளதால் விடாமுயற்சி படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், அப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:விஜய், அஜித் போன் கால், 'கோட்' படம் பற்றி அஜித் கூறியது என்ன?... வெங்கட் பிரபு கூறிய சுவாரஸ்ய தகவல்கள்!