சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு சமீபத்தில் அசர்பைஜானில் முடிவடைந்தது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் துணிவு திரைப்படம் வெளியானது.
இதனைத்தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. கடந்த நவம்பர் மாதம் விடாமுயற்சி படத்தின் டீசர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளியானது. விடாமுயற்சி பயணம் தொடர்பான கதை என கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு கிட்டதட்ட அசர்பைஜானில் நடைபெற்றது. டீசரின் மூலம் இந்த படத்தில் அர்ஜூன் அல்லது ஆரவ் வில்லனாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. மேலும் ‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு’ என்ற வாசகம் இடம்பெற்றது.
விடாமுயற்சி டீசர் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், கடந்த வாரம் அஜித்குமார் எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது. அஜித்குமார் தீனா பட காலகட்டத்தில் ஸ்லிம்மாக இருந்தது போல் உள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக அஜித் எடை குறைத்து காணப்படுகிறார்.