சென்னை: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பலர் மீது மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தலைவர், நடிகர் மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தனர். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகை ராதிகா சரத்குமார் சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து மலையாளத்தில் உள்ள தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சினிமாத்துறையில் பாலியல் பிரச்னை குறித்து மிகவும் தாமதமாக பேசப்படுகிறது" என கூறினார்.
தான் சினிமாத்துறையில் 46 ஆண்டுகளாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், தவறான அணுகுமுறைகள் தனக்கும் நேர்ந்தததாகவும், ஆனால் உறுதியாக நோ என்பதை பெண்கள் தான் கூற வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் ஒரு ஆண் கூட வாய் திறக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், திரைத்துறையில் தன்னை தைரியமான பெண்ணாக தன்னை பலரும் பார்ப்பதால், பல பெண்கள் படப்பிடிப்பு தளங்களில் தன்னிடம் உதவி கேட்டுள்ளனர் என்றார். மலையாளத்தில் மட்டுமின்றி, அனைத்து மொழி திரைத்துறையிலும் இந்த பிரச்னை உள்ளது என ராதிகா சரத்குமார் கூறினார்.