சென்னை:'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்குப் பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் 'ரத்னம்' திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஏப்ரல் 26 அன்று 'ரத்னம்' திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட வைப்ரன்ஸ்' 24 நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான Don't worry Don't worry da Machi ('டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி') வெளியிடப்பட்டது. மாணவர்களை இப்பாடலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது, “வருங்கால இந்தியாவுக்கு வணக்கம். இந்த நிகழ்ச்சியின் மேடைக்கு உங்கள் மத்தியிலிருந்து நான் வர காரணம் உங்களில் ஒருவன் நான் என்பதால் தான். கல்லூரியில் படிக்கும்போது கலாச்சாரப் பிரிவின் செயலாளராக இருந்து கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவன் என்ற முறையில் இந்தப் பணி எவ்வளவு கடினமானது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.நீங்கள் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளீர்கள்.என்றும் உங்களில் ஒருவனாக நான் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்” என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், “மாணவர்களாகிய உங்கள் அனைவரையும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் தருகிறது. நன்றாகப் படித்து, உழைத்து முன்னேறுங்கள். ஏணியைக் கூரையில் போடாமல் வானத்தில் போடுங்கள்.தம்பி விஷால் கடினமான உழைப்பாளி, அவரது உழைப்புக்கு இன்னும் பல தளங்கள் காத்திருக்கின்றன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடல் ஆசிரியர் விவேகா, மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ஏப்ரல் 26 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்” என்றார்.