சென்னை:இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து, கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். துப்பறியும் கதைக்களத்தில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தை விஷாலை வைத்து மிஷ்கின் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.
2019ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த போது, மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக விஷால் அறிவித்தார். ஆனால், அதன்பின் வேறு படங்களில் விஷால் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “உண்மையில் வார்த்தைகள் வரவில்லை. 25 வருட கனவு இன்று நனவாகிறது. 25 வருடத்திற்கு முன் நான் இயக்குநராக வேண்டும் என்று அப்பாவிடம் சென்று சொன்னேன். அதனை உணர்ந்த அவர், என்னை நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார்.
அவர் என்னை ஸ்க்ரீன் டெஸ்ட் செய்து, அப்பாவிடம் இவனை நடிக்க அனுப்புங்க, எப்ப வேண்டுமானாலும் இயக்குநர் ஆகலாம் என்றார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து, உங்கள் ஆதரவால் ஒரு நடிகனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். உங்களுக்கு முதலில் எனது நன்றிகள்.