சென்னை: அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டு தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க, ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில், லதா முருகனின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பகலறிவான். இப்படம் வரும் மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 16) கோலாகலமாக நடைபெற்றது.
இதில், நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளனர்.
இதில், இயக்குநர் முருகன் பேசியதாவது, “இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம். பல வருடக் கனவு இது. இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெறும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் ஆகியோர் படம் பார்க்காமலேயே விநியோகிக்க ஒப்புக்கொண்டதற்கும் நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி இருவர் தான். அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றிகள். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்" என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, "ஒவ்வொருவரும் பேசும்போது இப்படம் சிரமப்பட்டு எடுத்ததாகச் சொன்னார்கள். சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும்.
நடிகர் வெற்றி மிக தனித்துவமானவராக, தனக்கு பிடித்த நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இத்தனை புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை.
இம்மாதிரி சூழ்நிலையில் நல்ல கதைகளைத் தேடி, தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். ட்ரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது. இப்படத்தை உண்மையான அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கும் குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.