சென்னை: 'கண்ட நாள் முதல்', 'கண்ணாமூச்சி ஏனடா' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பிரியா இயக்கத்தில், நடிகர்கள் அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'பொன் ஒன்று கண்டேன்'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அவரது ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படம் நேரடியாக தனியார் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் என்ற விளம்பரத்துடன் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், படத்தில் முதன்மை பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள வசந்த் ரவி அதிருப்தி தெரிவித்து, அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அதிர்ச்சியாக இருக்கிறது. இது உண்மைதானா? ஜியோ ஸ்டுடியோஸ் எனும் இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா? ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என படம் தொடர்பான எங்கள் யாரின் அனுமதியும் இல்லாமல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.