மதுரை: இப்போதெல்லாம் தேர்வுசெய்து படங்களில் நடிக்கிறேன்; மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம், கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம். குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியாக சிறப்பான படமாக கேங்கர்ஸ் இருக்கும்” என வடிவேலு பதிலளித்தார்.
மதுரை பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில், வருமானவரித் துறை அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. முதன்மை விருந்தினராக வருமானவரித்துறை தலைமை ஆணையர் சஞ்சய்ராவ், முதன்மை ஆணையர் வசந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக நகைசுவை நடிகர் வடிவேலு பங்கேற்று பேசினார்.
பின்பு பத்திரிகையாளர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, “வருமானவரித்துறை சார்பில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு நாளுக்கு முன்பு எனக்கு பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அது இந்த நிகழ்வு மூலமாக நடந்துவிட்டது” என்றார்.
ஜல்லிக்கட்டு போட்டி பார்க்க செல்வீர்களா என கேட்டதற்கு, “நான் மாடு பிடிக்கும் ஆள் கிடையாது. மாடு பிடிப்பதை வேண்டுமென்றால் பார்க்கலாம். என்னை கொண்டு அதில் தள்ளிவிட்டு விடாதீர்கள். நேரமிருந்தால் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் சென்று பார்ப்பேன். பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டும், நிறைய வேலை இருக்கிறது. முன்பெல்லாம் ஜல்லிக்கட்டில் மாடு வருவதைப் பார்த்தாலே ஓடி விடுவேன். இப்போது ஜலிக்கட்டு கட்டுபாட்டோடு நடக்கிறது. அப்போதெல்லாம் மாடு இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருக்காது. சூழல் இருந்தால் ஜல்லிக்கட்டைப் பார்ப்பேன்.
இதையும் படிங்க:எனது ரசிகர்களை எல்லையில்லாமல் நேசிக்கிறேன்.. துபாய் கார் பந்தயத்தில் அஜித்குமார்
அடுத்து என்னென்ன படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “சுந்தர்.சி-யுடன் கேங்கர்ஸ் படம் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஃபகத் ஃபாசிலுடன் மாரீசன் படம் இருக்கிறது. அடுத்தாக பிரபு தேவாவுடன் நடிக்கப்போகிறேன். ஏப்ரலில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார். மேடையில் பேசும்போது ஒரு கோரிக்கை வைத்தீர்கள் என்ற கேள்விக்கு, “இருக்கிறவர்களிடம் வரியை போட்டு தள்ளுங்கள். ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என கோரிக்கை வைத்தேன். வடிவேலு சொன்னால் தப்பில்லை” என நகைச்சுவையாக பதிலளித்தார்.
விஜய்யின் அரசியல் பயணம், அஜித்குமாரின் கார் விபத்து குறித்த இரு கேள்விகளுக்கும் “வேறு ஏதாவது பேசலாம்” என நகைச்சுவையாக பதிலளிப்பதை தவிர்த்தார். 23ஆம் புலிகேசி மாதிரியான படங்களில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, “இப்போதெல்லாம் தேர்வுசெய்து படங்களில் நடிக்கிறேன்; மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம், கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம். குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியாக சிறப்பான படமாக கேங்கர்ஸ் இருக்கும்” என்றார்.
தமிழ் சினிமாவில் முழு நீள காமெடி படங்கள் குறைந்துவிட்டது பற்றி கேட்டதற்கு, “தனியாக வரும் டிராக் காமெடி, ஹீரோவுடன் வரும் நகைச்சுவை கதாபாத்திரம், நானே ஹீரோவாக நடிப்பது என மூன்று பரிமாணங்களில் நடித்து வந்தேன். இதில் தனியாக டிராக் காமெடி செய்வதை இப்போது விட்டுவிட்டேன். கதையுடன் ஹீரோவுடன் இணைந்து வரும் நகைச்சுவை கதாபாத்திரங்களை இப்போது நடிக்கிறேன். கேங்கர்ஸ் திரைப்படமும் ஆதவன் போல அப்படி ஒரு படமாக இருக்கும். என தெரிவித்தார்.