சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் கருடன். இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சூரி, சசிக்குமார், சமுத்திரக்கனி, இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சூரி, "இந்த மேடைக்கு வருவது ஒரு கடினமான விஷயம். ஒரு கதையின் நாயகனாக இரண்டு படமும் நடிச்சு, இந்த மேடைக்கு வந்துள்ளேன். கருடன் செய்தியாளர் சந்திப்புக்கு வந்தபோது ரொம்ப பதட்டமாக இருந்தது.
செய்தியாளர்கள் சந்திப்பின் இடைவேளையில் படம் நன்றாக இருப்பதாகச் சொல்ல, அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பயத்தோடு வந்தேன். பயில்வான் ரங்கநாதன் நின்றார். வந்து சூப்பர் என்று சொல்லி விட்டார். எல்லோரும் கொண்டாடிவிட்டார்கள். ஓப்பனிங் ஷோ நன்றாக இருந்தது என்றார்.
மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். இயக்குநர் வெற்றிமாறன் கிட்ட ஒருத்தன் எடிட்டரா வேலை பார்த்துட்டா உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அண்ணே மறக்கமாட்டேன். விடுதலைக்கு முன்.. விடுதலைக்குப் பின்.. என்று மாறிவிட்டது என வெற்றிமாறனை சுட்டிக்காட்டினார். சசிக்குமாருடன் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறேன். அவர் ஒருபோதும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை. எனக்கு எப்போதும் நீங்க தான் ஹீரோ" என்று சூரி நெகிழ்ச்சியுடன் பேசினார்.