சென்னை: IIFA எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் 2024 அபுதாபியில் நடைபெற்றது. இதில் பாலிவுட்டில் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்திற்காக ஷாருக்கான் வென்றுள்ளார். இந்த விருதினை இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஷாருக்கானுக்கு வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான விக்கி கௌஷலுடன் புஷ்பா படத்தின் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு ஷாருக்கான் நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் மேடையில் இயக்குநர் கரண் ஜோஹருடன் ஷாருக்கான் பேசுகையில், “சச்சின், சுனில் சேத்ரி, ரோஜர் ஃபெடரர் போன்ற ஜாம்பவான்களுக்கு எப்போது ஓய்வை அறிவிக்க வேண்டும் என தெரியும்” என்றார்.
அதற்கு ஷாருக்கானை சீண்டும் வகையில் கரண் ஜோஹர், "பிறகு நீங்கள் ஏன் ஒய்வு முடிவை எடுக்கவில்லை" என கிண்டலாக கேட்டார்". அதைக் கேட்ட ஷாருக்கான், “நானும், தோனியும் வித்தியாசமான லெஜண்டுகள். முடிவை எடுத்த பிறகும் 10 ஐபிஎல் விளையாடுவோம்” என்றார்.
இதையும் படிங்க: நான் அடுத்த தளபதியா?... ரசிகர்கள் கோஷத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதில் என்ன? - Actor sivakarthikeyan about vijay
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆர்ப்பரித்தனர். கடைசி சில வருடங்களாக ஷாருக்கான் நடித்த படஙக்ள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் கடந்த 2023இல் ஷாருக்கான் நடித்த டங்கி, ஜவான், பதான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த IIFA விருது நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் சிறந்த இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு விருதுகளை பெற்றது. மேலும் ஜெயிலர், சித்தா போன்ற படஙக்ளும் விருதுகளை வென்றது.