சென்னை: தமிழக அரசியலில் முக்கிய தலைவரான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர் பலரும் தங்களது வாழ்த்துகளையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த விழாவை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களின் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் பிறந்தநாளில் ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையத்திலும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் ஜெயலலிதா குறித்தும் வேதா இல்லம் குறித்தும் தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த்,
நடிகர் ரஜினிகாந்த் (ETV Bharat Tamil Nadu) செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “4வது முறையாக வேதா இல்லத்திற்கு வருகிறேன். 1977இல் நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடிப்பதாக இருந்தது, அப்போது என்னை பார்க்க வேண்டும் என அழைத்தார். அப்போது இந்த இல்லத்திற்கு வந்தேன். அதன் பிறகு இரண்டாவது முறையாக ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் திறப்பு விழாவிற்கு அழைப்பதற்காக வந்திருந்தேன்.
மூன்றாவது முறை என் மகளின் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்தேன். இன்று நான்காவது முறையாக வந்திருக்கிறேன். ஜெயலலிதா நம்முடன் இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் அனைவரது மனதிலும் எப்போதும் நிலைத்திருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில், அவருக்கு அஞ்சலி செலுத்தி அவருடனான இனிமையான நினைவுகளோடு இருக்கிறேன். அவருடைய நாமம் எப்போதும் வாழ்க” என்று பேசினார்.
இதையும் படிங்க:”’வெந்து தணிந்தது காடு 2’ இப்போதைக்கு இல்லை”... ’அகத்தியா’ பட நிகழ்வில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
இந்நிகழ்வில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா அவரது கணவர் மாதவன் மற்றும் அதிமுக நிர்வாகி புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர். ரஜினிகாந்திற்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.