சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை சார்பில், மறைந்த நடிகர்கள் விசு மற்றும் பிறைசூடன் ஆகியோருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியும், மூத்த எழுத்தாளர்கள் மூவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியானது சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதா ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன் பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ராதா ரவி, "சினிமாவில் நிரந்தர விரோதிகள் என யாரும் இல்லை, நிரந்தர நண்பர்கள் என யாருமில்லை. பெப்சி யூனியனில் 24 யூனியன்கள் உள்ளது. இந்த சங்கங்கள் இல்லை என்றால் சினிமாவே இல்லை.
எனக்கு 2 காலிலும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்னால் நடக்கவே முடியவில்லை ஆனாலும் இங்க வருவதற்கான காரணம் என்னுடைய ஆர்வம். டப்பிங் யூனியனில் நலிந்த கலைஞர்கள் 10 பேருக்கு வருடா வருடம் 1 லட்சம் ரூபாய் பண உதவிகள் செய்து வருகிறோம்.
சினிமாவில் என்னை எல்லோரும் திருடன் என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் எல்லோரின் மனதை திருடியவன் தான். 2 கோடி 3 கோடி பணம் திருடிவிட்டேன் என்று சொல்கிறார்கள் ஆனால், நான் அதைப் பற்றி எதுவும் கவலைப்படுவதில்லை" என்று கூறினார்
இதன் தொடர்ச்சியாக ராதா ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பிரச்சனை இன்று அல்லது நாளை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது இப்போதைக்கு தீரப் போவதில்லை. விஜயகாந்த் இருந்த வரை எந்த சங்கத்திலும் எந்த பிரச்சினையும் வந்ததில்லை.