சென்னை:விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வெளியான நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் விஷால் உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டார்.
ஜெமினி ஃபிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ஜனவரி 10-ஆம் தேதி "மதகஜராஜா" திரைப்படம் வெளியான நிலையில் அதற்கு முன் "மதகஜராஜா" திரைப்படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் நடிகர் விஷால் உதவியாளர் உதவியுடன் மேடையில் ஏறி, நடுங்கும் கைகளுடன் மைக்கை பிடித்துப் பேசினார். அவரது கண்களிலும் நீர் கசிந்து கொண்டே இருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் விஷாலின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. விஷாலின் மக்கள் தொடர்பு நிர்வாகிகள் அவருக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாக மருத்துவச் சீட்டை மட்டும் வெளியிட்டனர்.
ஆனால், இது இணையத்தில் விஸ்வரூபம் எடுத்து, பலர் விஷாலின் உடல்நலம் குறித்து தங்களது கருத்துகளை பேசத் தொடங்கினர். இந்நிலையில் நடிகர் விஷால் குறித்து யூடியூர் ஒருவர் அவதூறாகப் பேசியதாகக் கூறி நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் அளித்த புகாரின் கீழ் யூடியூபர் சேகுவேரா மற்றும் இரண்டு யூடியூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.