சென்னை: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 2018இல் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மெய்யழகன் படத்தின் டீசர் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. கார்த்தி, அரவிந்த்சாமியின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்படுகிறது. பிரேம்குமார் தான் எழுதிய நூலை படமாக்கியுள்ளதாக கூறியுள்ள நிலையில், மெய்யழகன் திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதே நேரத்தில் வெளியூர்களில் வாழும் மக்கள் தங்களுக்கு ’மெய்யழகன்’ படம் பார்க்கும் போது சொந்த ஊரில் சிறு வயதில் வாழ்ந்த நினைவுகள் தோன்றுவதாக நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் அளித்துள்ள வசூல் அறிக்கையின் படி, கடந்த மூன்று நாடகளில் மெய்யழகன் திரைப்படம் மொத்தமாக 14 கோடி வசூல் செய்துள்ளது. நேற்று மூன்றாவது நாள் (செப்.29) மட்டும் 5.60 கோடி வசூல் செய்துள்ளது.